Pages

Monday, January 30, 2012

நதியில் தவறிய துளி - 13

தொடர்ச்சி
என்னவளே
நான் கொடுத்துவைத்தவன் 

எதற்க்காக
அப்படிச் சொல்கிறீர்கள்

உண்மைதானடி

நீருக்கு தவித்திருந்த பயிர்களுக்கு
வேர்களில் பொழிந்துவிட்ட
மழையைப் போல் 

ஆனால் நான் 
தாபத்தில் தவிக்கும் முன்பே 
நீஎனக்கு காதல் மழை பொழிந்தாய் 

நான் உன்னை கண்டபின்தான்
கண்களுக்கு பார்வை 
அவசியமென்று உணர்ந்தேன்

எதற்க்காக என்னை
கடனாளியாக்குகிறீர்கள்

என்ன 
கடனாளியாகவா 

ஆம்

நீங்கள்
தொடாமலேயே முத்தமிட்டதாய்
உணர்த்த உங்களுக்கு 
உங்களின் நெகிழ்ந்த வார்த்தைகள்
போதுமாயிருக்கிறது

ஆனால்
உங்கள் புலன்களனைத்திலும்
நான் புழங்குவதாகச் சொல்கிறீர்கள்
என்னால் உங்களுக்கு 
அப்படி முடியவில்லை

எத்தனை முறை 
திடுக்கிட்டெழுந்தாலும் 
இரவில் என்னை 
உறக்கத்திற்கு பதில்
உங்கள் வார்த்தைகள்தான்
தழுவிக்கொண்டிருப்பதாய்
தோன்றுகிறது

இத்தனைக் காலம்
உங்களை உதாசினத்துக் கிடந்தததில்  
வாழ்க்கை என்னை
விலக்கியிருந்ததை
புரியாமல் கிடந்தேன்

தன்னுடைய அவஸ்த்தையை
வண்டிற்கு உணர்த்தத் துடிக்கும்
பூவைப் போல

நீங்கள் என் மீதுக் கவிழ்த்த
சுகங்களின் அலாதியை
நான் உங்களுக்கு உணர்த்த முடியவில்லை

அதனால் தான்
சொல்கிறேன்
என்னை கடனாளியாக்காதிர்கள்....

( தொடரும் )...


Friday, January 20, 2012

நதியில் தவறிய துளி - 12

தொடர்ச்சி...
பின்

அவள் கேட்டுக்கொண்டாள்
உங்களின்
கடைசி இரவிற்கு முன்னமே
என்னை
விழி மூடச் செய்யுங்கள்

எனக்கது
போரில் புன்பட்டவனுக்கு
நாட்டின் தோல்விச் செய்தி 
கேட்டதைப்போல இருந்தது

நான் பிரிந்து
அவளா
அவள் பிரிந்து
நானா

காதல் பிரிந்து 
மௌனமா 
சிறகுகள் பிரிந்து
பறத்தலா...

இல்லை
கண்ணே

இறப்பு என்பது எப்படி உண்மையோ
நம் காதல்
அதைவிட உண்மையானது 
என்பதும் உண்மையே

அது
நம்மை
நாமாக இருக்கும் போதே
இறக்கவைக்கும்...

அதிகாலை புல்லின்
பணித்துளியைப்போன்று
அவளின்
இமைகள் அரும்பியிருந்தன

அவள் 
என் நெஞ்சில் சாய்ந்தாள்
என் நெஞ்சு 
அவளின் முதுகு சாய்ந்தது

அப்போது
துள்ளிவந்த அலையின்
ஒரு முடிச்சு
எங்கள் மீது
விழுந்து அவிழ்ந்தது

பார்த்தாயா உயிரே
வாழ்வினுள் செல்லும் நமக்கு
கடல் வாழ்த்துச் செய்தி
அனுப்பியிருக்கிறது

இல்லை
நான் அதனை பார்க்கவில்லை
அந்த உப்பு நீர்
என் கண்ணீருக்கு முன்
உங்கள் மார்பை நனைத்திடுமோ
என்று அஞ்சியிருந்தேன்

அதனால்
நானதை பார்க்கவில்லை...

சொல்லுங்கள்
நான் என்ன பேசியிருக்க முடியும்
என்னதான் பேசியிருக்க முடியும்

இந்த தூறல்
விழுந்ததிற்கே
தன்
பிரவாகம் ததும்பியதாக 
சொல்லுகிறாளே

நான்
என்னதான் செய்துவிடமுடியும்

அலையின் விளிம்பொன்று
என் விரல்களைமட்டும்
நனைத்துவிட்டுப் போனது...

( தொடரும் )...
Wednesday, January 18, 2012

நதியில் தவறிய துளி - 11

தொடர்ச்சி...
படித்து வந்தாயா
எனும் ஆசிரியரிடம்
மாணவனின் மௌனம்
பல வார்த்தைகள் பேசக்கூடும்

வண்டுகளிடம்
பூக்களின் மௌனம்
வெட்கம்

ஆனால்
இங்கே

அவளின் மௌனம்
அவள் நெகிழ்ந்திருப்பதை 
சொல்லியது

என்னதான்
மௌனம்
சுகமானதென்றாலும்

அவளின்
சிவந்தப் பேச்சின்
சௌந்தர்யம்
வேறேதனில் வந்துவிடக்கூடும்

அதனால்...

பூவிதழ்களை
சிறகசைப்பில் களை(லை)க்கும்
வண்ணத்துப் பூச்சியைப்போல 
நானந்த
மௌனத்தைக் களை(லை)த்தேன்

அடி சகி
ஒரு மெழுகைப்போல 
நீ உருகுவது
எனக்குப் புரிகிறது

ஆனால்
நீ உருகினால் 
எனக்கு வெளிச்சம் வருமா
புரியாதா...

அப்படியானால்
நான் உருகுவது
உங்களுக்கு இருளைத் தருகிறதா

இல்லையில்லை 
அப்படியில்லை

விம்மும் குழந்தையிடம்
எந்த தாயும்
உருகிக்கொண்டிருப்பதில்லை 
என்பதை உணர்த்தினேன்
அவ்வளவுதான்...

அவளென்
விரல் தொட்டாள்

என் ஒவ்வொரு செல்லிலும்
கூடு கட்டியிருந்த
கூட்டுப்புழுக்கள்
கூடு கிழித்து
சிறகசைப்பதாய் உணர்ந்தேன்

( தொடரும் )...

Sunday, January 15, 2012

நதியில் தவறிய துளி - 10


ஏன் இப்படி

பார்க்கிறீர்கள் 

எப்படி

தொலைத்த பொருளை
தேடும் சிறுவனைப் போல

அடி உயிரே 
விடையையும்
நீயே கூறிவிட்டாய்

அப்படியென்றால் நீங்கள்...

உண்மைதான்

உன் விழிகளில்
என் பார்வையை 
உனது துடிப்பில் 
என் இதயத்தை 
உன் சுவாசத்தில்
எனது நுரையீரலை

இப்படியாய்
உன் ஒவ்வொன்றிலும்
என் ஒவ்வொன்றாய் தொலைந்துப்போனது

அவைகளுள்
ஒன்றிரண்டேனும்
அடைந்துவிடும் பொருட்டே 
உன்னில் தேடிக்கொண்டிருக்கிறேன்

போதும் போதும்
எனக்கு
என்னென்னவோ ஆகிறது

அப்படியானால் 
என்னை நானில்லாமல்
செய்துவிட்டாயே 
அதற்கென்ன சொல்வது

யார்
நானா
உங்களை...

மன்னித்துவிடு
நீயென்று குறிப்பாக
சொல்லமுடியாது

ம்...
அப்படியானால்...

ஆம்
உன் விழிகள்
என்னைக் கொன்றது
தீண்டல்
உயிர்த்தெழச் செய்தது 
இப்படியாக...

அப்பப்பா
என்னவொரு
கற்பனாவாதி

இல்லையில்லை
நான் உன் வாதி

புரியவில்லையே

எனக்கு
கனவுகளென்றும் 
கற்பனைகள் என்றும்
உனையன்றி வேறில்லை

அதனால்
நான் உன் வாதி

எங்களின் உரையாடலில்
இந்த இடத்தில்
மௌனம்
பேசத்துவங்கியது...

இந்த மௌனம் இருகிறதே
இதுதான்
பேசாமல் அதிகம் பேசுகிற மொழி

போருக்கு போய்வருகிறேன்
எனும் வீரனிடம்
மனைவியின் மௌனம் 
அவஸ்த்தை,

( தொடரும் )...


Thursday, January 12, 2012

நதியில் தவறிய துளி - 9


தொடர்ச்சி...
ஆனால் அவள் வாங்கவில்லை
விருந்தினர்
கொடுக்கும் பரிசை
வாங்க மறுக்கும்
குழந்தையைப்போல் அவள்
தயங்கினாள்

எனக்குமுன் 
வாடத் துவங்கியது
பூ

அப்போதுதான் 
அந்த அற்புதம் நிகழ்ந்தது

ஆம்
அவள்
முகம் திருப்பி
கூந்தல் காட்டி நின்றாள்

என்னயிது 
நிலவை மறைத்து 
மேகம் போல...

இல்லையில்லை
நான் புரிந்துக்கொண்டேன்
எனக்குள்ளே மழை பெய்து
நான்
நனைந்தும் கொண்டேன்...

ஆம்
அதற்கு அர்த்தம்
நான்
சூட்டிவிட வேண்டுமென்பது !

பிறகென்ன
நானும்
அந்த அதிசயம் நிகழ்த்தினேன்
பூவுக்கு பூவைச் சூட்டினேன்

இப்போது 
அந்த பூ 
வாசம் கூடியிருந்தது

அவள் பணித்துளிச் சுமந்த 
புல்லைப்போல
குனிந்திருந்தாள் 

குனிந்தேயிருந்தாள்...

இனியும்
முடியாதென 
நான் குனிந்தேன்

அவள் 
நுனி பாரம் குறைந்த
புல்லைப்போல
நிமிர்ந்துக்கொண்டாள்

கொஞ்ச நேரம் 
நிமிர்ந்தும்
குனிந்தும் கிடந்தோம்

ஆனால்
வெகு சீக்கிரமே 
ஒரு தருணத்தில் 
எதிரெதிர் எறும்புகளைப்போல

ஒரே நேரத்தில்
பார்த்துக்கொண்டோம்

பார்த்தல்
துவங்கியது இப்போது

அவளின் விழிகள்
மழையாகவும்
எனது விழிகள்
பள்ளத்தாக்கைப்போலவும் 
மாறியிருந்தன

அவளே முதலில்
இமைத்தாள்
எனினும்
கொஞ்சநேரம் நான்
இமைக்காமலேயே இருந்தேன்

( தொடரும் )...
Monday, January 9, 2012

நதியில் தவறிய துளி - 8

தொடர்ச்சி...

பயணத்தின்
ஜன்னலோரக் காட்சிகளாய் மட்டுமே 
என்னால் அவளை
நினைவு கூற முடிகிறது


கனவுகளில் 
எனை
ஆரத்தழுவிக்கொள்கிறவள்


நிஜங்களில்
தூரத்தில்
அழைத்துக்கொண்டேயிருக்கும் 
வானத்தின் குழந்தையைப்போல
இருந்தாள்


அப்படி 
ஒரு கனவில்...


அந்தக்கனவை நான் 
எப்படியுனர்த்த ?


இருந்தாலும்
முடிந்தவரைச் சொல்கிறேன்...


மேகத்தின் தூறல்கள்
ஒவ்வொன்றும்
வேர்களாகவும் 
பூமியின் பூங்காக்கள்
ஒவ்வொன்றும் மழையாகவும்


அதாவது
மழையை நோக்கி
வேர் பொழிந்தது போலான
அந்த
மயக்கம் மிகுந்த கனவை
நான் மறந்திருந்தால்


அதுவரை நான் 
நியாபகங்கள் பற்றி
தெரிந்திருக்கவில்லை என்றுதான் அர்த்தம்


அந்த
மகரந்தம் மிகுந்த நாளில்...
முதன் முதலாக
அவளுக்கு நான்
பூ கொண்டு போனேன் 


எனக்கு
பூவைப்போன்ற பரிசு
பெரிது வேறில்லை
அவளுக்கு பூவென்பது
பெரிதாய் ஒன்றுமில்லை


இருந்தாலும் 
பூ கொண்டு போனேன்...


( தொடரும் )...

Friday, January 6, 2012

நதியில் தவறிய துளி - 7

தொடர்ச்சி...

எல்லா
காதல் காரர்களையும் போல
நானும்


ஏதோவொரு
தனிப் பாதையில்
தவறி விழுந்து
தூக்கிவிட ஆளில்லாமல்
தானே எழுந்து அழுதுவரும் 
குழந்தையைப் போல 
வாழ்க்கையை நோக்கிப் போகிறேன்


ஆனால்
எதோ கவனத்தில்
எல்லோர் எதிரிலும் விழுந்துவிட்ட
இளைஞனைப் போல
வாழ்க்கை என்னிடம்
கூச்சத்தோடு விலகிப் போகிறது


இந்தச் சமூகத்தில்
சராசரி கனவுகளுக்கு
கிடைக்கும் அங்கீகாரம்
வித்தியாசமான
நிஜங்களுக்குக் கிடைப்பதில்லை


ஒரு வேலை
நான் தவறா...


இல்லை
நிச்சயம் இல்லை


ரோஜாச்செடியில் 
மல்லிகைப் பூத்தால்
சமூகம் அஞ்சும்
நான் ஆர்ப்பரிப்பேன்


ஏனெனில்
எனக்கு
இந்த அன்றாடங்கள் பிடிக்கவில்லை
ஒரே மாதிரியான இயக்கம் கொண்டிருக்க
நான் இயந்திரமில்லை


என்னை விலக்கி, விலகி 
போகும் சமூகம் 
என்னை கூவமாக கருதுமின்
அவர்களுக்கு குமட்டுவதால்
இந்தக் கூவம் புனிதமாகிவிடமுடியாது


கங்கையாக கருதுமின்
அவர்கள் வணங்குவதால்
இந்த கங்கை 
இன்னும் சிறந்துவிடமுடியாது


எனக்கும்
கட்டுகளுண்டு


கூட்டைவிட்டுப் பறந்தாலும்
எந்த பறவையும்
வானுக்கு வெளியே
சென்றுவிடமுடியாது


ஆனால்
என்னை
கட்டியிருப்பவை
பூச்சங்கிளிகளாய் இருக்குமாறு
பார்த்துக் கொள்கிறேன்


அதற்கான
பூக்களை நான்
காதலிலிருந்து
பறித்துவருகிறேன்.


நட்ச்சத்திரா 
நீதான் என்னென்ன 
மாற்றங்களை
நிகழ்த்திவிட்டாய்...


உண்மைதான்


அவள்தான்
அடிக்கடி
கண்களைக் கட்டி
என்னை ஒரு பிருந்தாவனத்தில்
கொண்டு அவிழ்த்துவிடுகிறாள்


அவள் கொடுக்கும்
துயரங்களுக்கும் மகிழ்வுகளுக்கும்
பெரிய வித்த்யாசம் இருந்ததாக 
எனக்கு தோன்றியதில்லை


அவை 
ஒரு தாயின்
இரண்டுக் குழந்தைகளைப் போல...


( தொடர்வோம் )...
Wednesday, January 4, 2012

நதியில் தவறிய துளி - 6


தொடர்ச்சி...
எனது தோள்கள் 
பூக்குவியல்களால் ஆனதில்லையே
முதன்முதலாக  வருந்தினேன்...

அவளின்  இதயம்
துடித்துக்கொண்டிருந்தது
என்பதைவிட

என் முதுகு துளைத்து
என்னிதயத்தொடு பேசிக்கொண்டிருந்தது
என்பதுதான் உண்மை

என்னவொரு
மென்மையான இசைக்கற்றை
சுகந்தமான தாளகதி...

பாடலுக்கு
இசையமைக்க
கருவிகள் தேவையில்லை,

முதுகில்
அதுவும் பயணத்தில்
விழிகளால் ஓய்வெடுக்கும்
காதலியின் இதயம் ஒன்றே
போதுமென்று புரியுங்கள்
இசைக்கலைஞர்களே ...

அவளின் மூச்சுக்காற்று
எந்தெந்த தீக்களாலோ
காயம்பட்டிருந்த என்னுயிருக்கு 
மருந்து பூசிக்கொண்டிருப்பதாகவே
எனக்குத் தெரிந்தது

இனி
எப்போதெல்லாம்
அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாளோ
நான் விழித்திருக்க வேண்டும்.,

.......................
........
.................

நல்லவேளையாக
என் கனவில் நாங்கள்
போய்க்கொண்டிருக்கும்போதே 
நான்
விழித்துக்கொண்டேன் !

அந்தக் கனவைக்
கண்டநாள் முதல்
தினமும் அதே சூழல்களோடு
உறங்கச் செல்கிறேன்

ஆனால்
ஒருமுறை போனால்
திரும்பாத உயிரைப்போல
அந்தக் கனவும்
அதன்பிறகு வரவேயில்லை...

ஆனாலும்
அதுமுதல் நான்
கனவு வாழ்க்கை மட்டுமே
பிடித்துப்போன
உயிரினமாகிப்போனேன் 

ஆனால்
அந்தக் கனவு மாளிகையின் அடியில்
மூச்சுத் திணறிக்கொண்டிருந்தன
என் நிஜங்கள்...

ஆடைகள் நனையக்கூடாதென்றால்
அலைச் சுகம் கிடைக்காதென்று
எனக்குத் தெரிந்தது 
அவளுக்குத் தெரியவில்லை

என் வாழ்க்கைக்கு
அவள் வேண்டுமென்பது
நல்ல விதைகள் 
பூமி பிளப்பது போல எளிது

அது போலவே
அவளும் நினைப்பதென்பது
முளைத்தச் செடிகள் எல்லாமும் 
பூப்பதைப்  போல அரிது

ஆனால்
இந்த எளிதையும்   அறிதையும்  
என்
கனவுகளோ நினைவுகளோ
புரிந்திருக்கவில்லை

நான்
அவளை
சுவாசத்தை நுரையீரல் போன்று
நிறையக் காதலித்தேன்

அவளைக் காணத்தான்
செடிகளுக்கு
கண்கள்
பூக்களாக மலர்கிறது
என்று சுகித்திருந்தேன்...

ஏனெனில் 
அதுவரை எனக்கு
பாலைவனமும்
கானலும் மட்டுமே
பரிச்சயமாய் இருந்தது

மாற்றினாள்
என்னை
நந்தவனங்களின் நளினங்களில்
புதைந்து போகச் செய்தாள்

இப்போதெல்லாம் 
காதல் நிகழ்கிறது
ஒன்று வாழ்க்கைக்கு வெளியே
அல்லது வாழ்வைத் தொலைத்து...

ஆனால்
நான் முகம் 
எனக்கு
காதல் ஒரு விழி
வாழ்க்கை ஒரு விழி

நான் குருதி
காதல் 
நிறமிகள் எனக்கு

( தொடர்வோம் )... 

Tuesday, January 3, 2012

நதியில் தவறிய துளி - 5


தொடர்ச்சி...

நட்சத்திரா 
என்னை
அனைத்துக் கொள்வாயா
என்றேன்..
Roses of my heart


அவளுள் 
எதோ  நிகழ்ந்திருப்பதை
அவளின் ஸ்பரிசம் உணர்த்திற்று

ஆம் 
என்னை அணைத்துக்கொண்டாள் 

அது போலவே 
அவளின்
கண்களையும்
பார்வையையும்
அவளின் துப்பட்டா
அனைத்துக்கொண்டிருந்தது

நான்
பிறந்ததிலிருந்து 
அதுவரை
செத்துக்கொண்டே
வாழ்ந்ததுமில்லை
வாழ்ந்துக்கொண்டே
செத்ததுமில்லை

அப்படியே இருந்திருந்தாலும்
அந்நிலையில்
வாகனமியக்கியதுமில்லை 

ஒரு ஏகாந்த சூழலில் 
எதுவென்று தெரியாத
இலக்கு வந்துக் கொண்டிருப்பதோ
தனிமையின்
இருட்டுக் காலை
போய்க்கொண்டிருப்பதோ
எங்கனம் உணருவது நான்...

என்னவென்று சொல்ல

எனக்குப் புரியவில்லை
தூங்கும் போதா 
சிரிக்கும் போதா 
பேசும்போது,
மௌனத்தின் போதா.....

எதுதான் அவளது 
நிஜமான அழகு?

ஆனால்
இப்போது
வெட்கப்படும்போதுதான்
அழகென்றுத் தோன்றியது...

மரத்தின் சதை துளைத்து
உலகை அடைந்த
தளிர் போல
என் நெஞ்சின் 
சதை துளைத்து
காதலை அடைந்தவள்

எப்படிச் சிவக்கிறாள்
அடடா...

சூரியன்
வந்துக்கொண்டிருந்தது...

எங்களை
வரவேற்கவா
துரத்தவா...
புரியவில்லை.

இத்தனைக் கலவரங்கள்
ஏதும் புரியாமல்

சாத்தானின்
முடிவு தெரியுமுன்பே
தூங்கிவிடும்
குழந்தையைப்போல 
அவள் தூங்கிவிட்டிருந்தாள்

என்பதை
நான்

ஒருமையில்
பல வார்த்தைகள்
பேசிக்கொண்டிருந்தபோதுதான்
உணர்ந்தேன்...

அவள்
எனது தோளில்
தலை சாய்த்திருந்தாள்

என் தோள்கள்
பூக்குவியல்களால்
ஆனதில்லையே
என்று

முதன் முதலாக 
வருந்தினேன்

( தொடரும் )...

Monday, January 2, 2012

நதியில் தவறிய துளி - 4அவளின் உதடுகள்
ஒரு புதுவிதமான இசைக்கருவி
எந்த சப்த்தமும் இசையாகிறது


அவள் உச்சரித்த
என் பெயரின்  முறை
அணைக்காமல் அவள்
என்னருகில்
வைத்திருப்பதை உணர்த்திற்று


அதாவது
வயிற்ருக்குள் இருக்கும்
குழந்தைக்கு
தந்தையிடும் முத்தம் போல


அவள்
என் காதருகில்
என் பெயரை உச்சரித்தாள்


எனக்கப்போது
ம்
என்பதைப் போல
வேறெந்த பதிலும் அல்லது
கேள்வியும்
சிறந்ததாகத் தோன்றவில்லை


வண்டி
போய்க்கொண்டிருந்தது


அவள்
மீண்டு பாடினாள்


அட
என்னவொரு அதிசயம்
சற்று வேகமாக வரும் தென்றலில் கூட
வாடிவிடும் பூ
வேகத்தையும் விரும்புகிறது இப்போது


என் யூகிப்பின் நொடிகள்
அவளுக்கு
கனத்திருக்க வேண்டும்


மீண்டும்
அவளே...
என்ன யோசிக்கிறீர்கள்


நான் சிரித்தேன்
அவள் சிவந்தாள்


பிறகு
இப்படிச் சொன்னேன்


வேகமாகச் சென்றால்
தூரத்தோடு
என் மனமும் சுருங்கிப்போகுமே


ஆனால்
இப்பனியதிகாலையில்
உங்கள் அருகாமையின் கணங்களை
தாங்குவது என்பது
அவ்வளவு எளிதல்ல
புரியுமா
என்றாள்...


இம்முறை
ன்னுயிர் சிலிர்த்தது
பனியினால் இல்லை


பின்
நண்பனின் விளையாட்டுப் பொருளைப் போன்றே
தனக்கும் வேண்டுமென்பதை
தயங்கித் தயங்கி கேட்கும்
சிறுவனைப் போல


நட்சத்திரா
என்னை
அனைத்துக்க் கொள்வாயா
என்றேன்...


( தொடரும் )