Pages

Sunday, February 19, 2012

நதியில் தவறிய துளி - 16

தொடர்ச்சி ...
கனவுகளும் நினைவுகளும் பெரும்பாலும்
வாழ்வின் எதார்த்தங்களில் இருந்து 
வெகுவாய் விலகியே இருக்கின்றன

எப்போது நினைத்தாலும் 
அருகே அமர்ந்து தலைகோதுபவள்
எப்போது கண்கள் மூடினாலும்
எனது பாதைகளின் முட்களை வருடி
பூக்கள் செய்பவள்

நிஜத்தில்
தனது வண்ணங்களை சட்டை செய்யாத
வண்ணத்துப் பூச்சியைப்போல 
என் காதலை தீண்டத்தகாததாய் பாவித்தாள்

நான் அவளை
காதலித்துக்கொண்டேயிருந்தேன்
அவள் என்னை மறுத்துக்கொண்டேயிருந்தாள்
..........

ஆனால்
வெளிச்சங்கள் அவசியமில்லாத 
வித்தியாசமான நிழல் போல
அவளின் நினைவுகள் என்னை 
தொடர்ந்துக்கொண்டிருந்தன

ஒரு பூவின் தலைக்குமேலே பறந்து
உட்காராமல் சென்றுவிடும்
வண்ணத்துப்பூச்சியைப்போல
என் காதலை தெரிந்தும் 
அவள்
பேருந்தின் ஜன்னல் வழியே தெரியும்
சுவாரசியமான காட்சியைப்போல 
பார்த்தபடி சென்றாள் 

நான் காதலில் தொலைந்தது
அவள் தேடிக்கொள்வாள்
என்ற நம்பிக்கையில்தான்

எல்லோர் கால்களிலும் இடற
நான் என் கவிதைகளை தவறவிட்டது
அவளுக்கு கிடைத்துவிடும்
என்ற நம்பிக்கையில்தான்

ஒவ்வொரு முறையும் 
பரிகசிக்கப்படும் என் காதலை
இறந்த எறும்பை இழுத்துச்செல்லும் 
இன்னொரு எறும்பென பற்றிவருவது 
வாடிக்கையாயிருந்தது எனக்கு

நான் உணர்ந்த ஏகாந்தம் 
எனக்குள்ளிருந்தது காதல்
என்றறிந்த நாளோடு நின்றுவிட்டது

நானுணர்ந்த சுகம்
கவிதைகளைப் பூசிக்கொண்டு
தொடர்ந்துவருகிறது

அவள்தான் என்னை
தீச்சருகுகளில் மீட்டு 
பூக்களுக்குள் புதைத்தாள்

இனிமை முலாம் பூசியிருந்த 
என் வாழ்க்கையை
நிஜமாகவே இனிமையாக்கியது
அவள்தான் 

( தொடரும் )....
Tuesday, February 14, 2012

நதியில் தவறிய துளி - 15

தொடர்ச்சி...

இல்லை
என்னையுனக்கு கொடுக்கவேயில்லை


....


நான் உனக்கானவன்
உனக்கான ஒன்றை
உனக்கே கொடுப்பதெப்படி ?

.....
மௌனம்...

பிறகு
அவளே அவளின் மௌனத்தில்
கல்லெறிந்தாள்
அது
நிலவின் மேல் மேகத்தை
பிய்த்து எரிந்ததைப் போல இருந்தது


என்னை
மன்னித்துவிடுங்கள்...


மன்னிக்கவா
எதற்கு ?


உங்களை புரியாமல்
எரிந்துக் கிடந்தேனே
மாடத்தின் மேல் அனல் துப்பும்
விளக்காய்
இருந்தேனே

அதற்க்கு.

அடி சகி.,
நீ கேட்டு இல்லையெனக்கூடாது
அதனால் மன்னிக்கிறேன்


ஆனால்
நீ வெறுப்பதர்க்கேனும்
புரிந்திருந்ததால்தான் அப்போது
நான் வாழ்ந்திருந்தேன்

..........
.........................
......
.................


இப்படியெல்லாம்
ஒரு ஏகாந்தம் என் நாட்களில்
நிகழவே கூடாதா

இது என்ன
என் காதலில் மட்டும்
இலையுதிர்க் காலத்திற்குப் பிறகு
வேருதிர்க்காலமா ???

என்றெல்லாம்
மருகினாலும்


இதுபோன்ற
கனவுகளும் நினைவுகளும்
எப்போதும் என்னில் குறையாமலேயே இருந்தது

மேகங்கள் கடக்கையில்
சருகுகள் அசைத்து சமிக்ஞை செய்யும்
இலையுதிக்கால மரம் போல

விலகிச்செல்லும்
அவளிடமிருந்து என் காதலின் பச்சயம் கெடாமல்
பார்த்துக்கொள்வது
இப்படியான கனவுகளும் நினைவுகளும்தான்

இன்னும் சொல்வதானால்
ஒரு பூஞ்செடியின் அடியில் வாழும்
எறும்பைப்போல
அவளின் நினைவுகளோடு
வாழ்ந்துக்கொண்டிருந்தேன்

பெரு மழையில்
மொட்டின் மீது மோதிச்சிலிர்க்கும்  துளியைப்போல
மறுத்துச்செல்லும் அவளோடான
நியாபக வாழ்க்கையில்
சுகிக்க முடிகிறது என்னால்


நான் அழகாகிப்போனேன்
என்னுள்ளிருந்த பெண்மை உணர்ந்தேன்
மகிழ்வுக்கும் எனக்குமான தூரம் குறைந்தது
......
இன்னும் இன்னும்....

ஆனால்
என்னை அவளுக்கு உணர்த்துவதிலேயே
என் காதலின் ஈரமெல்லாம்
தீர்ந்துப்போகுமோ என்றும்
ஆழ்ந்திருந்தேன் ....

 ( தொடரும் )...

Monday, February 6, 2012

நதியில் தவறிய துளி - 14


தொடர்ச்சி ...


வேண்டாம் கண்ணே 
நீ உணர்த்த வேண்டாம் 
நீ கடனாளியுமல்ல

நீ உணர்த்தமுடியவில்லை 
என்று உணர்த்திய 
உன் உணர்வுகளுக்காகவே நான் 
நட்சத்திரங்களை விடவும்
ஒன்று கூடுதலாக கவிதை எழுதவேண்டும்

தாயின் மார்புகள்
கணத்திருப்பதை உணராமல் 
பாலருந்த மறுக்கும் குழந்தையைப் போல 
நான் உன்னை உணராமல்
என்னையே உணர்த்திக்கிடந்தேன்

நீ புத்தகம் என்பதுப் புரியாமல்
வெள்ளைத் தாளென
உன்னில் என்னைக் கிறுக்கிக் கிடந்தேன்

இனி அப்படியிருக்காது...

போதும்
நான் உங்களை வருத்திவிட்டேனா ?

இல்லையடி
ஆனால் திருத்தியிருக்கிறாய்
இனி
நீ பேசு
நான் கேட்டுக்கிடக்கிறேன்
நீ கேள் 
நான் சொல்லிக்கிடக்கிறேன்

அதிகம் வளர்ந்த 
நகத்தையும், நாணத்தையும் களைவது
வருத்துவதாகாது

உன் அன்பிற்கு 
அநேகமாய் நான் என்னையே கொடுத்தாலும்
அது பெரிதென இருக்காது

என்ன ?
அப்படியானால்
இதுவரை உங்களை எனக்கு
கொடுக்கவே இல்லையா...

கள்ளி .,

அதெல்லாம் இல்லை
சொல்லுங்கள்
உங்களை எனக்கு கொடுக்கவே இல்லையா ?

அவள் 
என் பதிலை யூகிக்கமுடியாதவள் அல்ல 
ஆனாலும்
நானாக சொல்லவேண்டுமென்று
கேட்டாள்...

அதற்க்கு நான் 

ஆம்
என்னை உனக்கு கொடுக்கவேயில்லை
என்றேன். ?!

( தொடரும் )...