Pages

Saturday, September 1, 2012

மகரந்தத் துகள்களின் நீள் வடிவம் - 17

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 




தொடர்ச்சி...

...
எனது கவிதைகளை
எல்லோர் கால்களிலும் இடறும்படி
நான் தவறவிட்டது
அவள் கண்டெடுப்பாள் என்றுதான்

நான்
அவள் தனக்குத் தெரியாமல் தரும்
சுகங்களுக்காக
தெரிந்து தரும் வேதனைகளை
பொருத்துக்கொள்ளப் பழகிவிட்டிருந்தேன்

அவள் எனது வாசமிகுந்த நாட்களை
நுகர்ந்து கொண்டாலும்
அவளின் நினைவுகள்
எனது காலங்களை
தேன் சொட்டி நிறைத்தது

அவளின் நினைவுகளோடு நெருங்குகையில்
எந்த பட்டாம்பூச்சியும் என்னைவிட்டுப் பறந்ததில்லை
அவள்தான் முதலாமவள்

அவளோடான இன்னும் நிறையக் கனவுகளில்
இன்னொன்று கேளுங்கள்

கனவுதான்
தேவையில்லாத வெளிச்சங்களை இருட்டாக்குகிறது
மர்மங்களின் மீது வெளிச்சம் பீய்ச்சுகிறது

செடிக்கு
முதல் பூவைப் போல
அந்தக் கனவு
அவ்வளவு அழகானதாயிருந்தது

ஆம்
அவள்
கனவில் வந்திருந்தாள்

அதுவொரு அழகான முன்னிரவுப் பொழுது,

"ஏ...
நிலாப் பெண்ணே
உன் கூந்தல் எத்தனை சுவை தெரியுமா ?"

அவள்
தூங்கிக்கொண்டே சிரிக்கும் குழந்தைப் போல
வெட்கத்தால் கேள்வி செய்தாள்

நான் பதில் பிதற்றினேன்
"ஒருபோதும்
உன் கேசத்தை நீ
முத்தமிட்டிருக்க மாட்டாயல்லவா

உண்மையில் அது
மகரந்தத் துகள்களின் நீள் வடிவம்"
என்றேன்

அப்போது
இமைகளுக்குள் அவளின் கண்கள்
வெட்கப்பட்டுக்கொண்டிருந்தன

தொடரும்...