Pages

Friday, January 20, 2012

நதியில் தவறிய துளி - 12

தொடர்ச்சி...
பின்

அவள் கேட்டுக்கொண்டாள்
உங்களின்
கடைசி இரவிற்கு முன்னமே
என்னை
விழி மூடச் செய்யுங்கள்

எனக்கது
போரில் புன்பட்டவனுக்கு
நாட்டின் தோல்விச் செய்தி 
கேட்டதைப்போல இருந்தது

நான் பிரிந்து
அவளா
அவள் பிரிந்து
நானா

காதல் பிரிந்து 
மௌனமா 
சிறகுகள் பிரிந்து
பறத்தலா...

இல்லை
கண்ணே

இறப்பு என்பது எப்படி உண்மையோ
நம் காதல்
அதைவிட உண்மையானது 
என்பதும் உண்மையே

அது
நம்மை
நாமாக இருக்கும் போதே
இறக்கவைக்கும்...

அதிகாலை புல்லின்
பணித்துளியைப்போன்று
அவளின்
இமைகள் அரும்பியிருந்தன

அவள் 
என் நெஞ்சில் சாய்ந்தாள்
என் நெஞ்சு 
அவளின் முதுகு சாய்ந்தது

அப்போது
துள்ளிவந்த அலையின்
ஒரு முடிச்சு
எங்கள் மீது
விழுந்து அவிழ்ந்தது

பார்த்தாயா உயிரே
வாழ்வினுள் செல்லும் நமக்கு
கடல் வாழ்த்துச் செய்தி
அனுப்பியிருக்கிறது

இல்லை
நான் அதனை பார்க்கவில்லை
அந்த உப்பு நீர்
என் கண்ணீருக்கு முன்
உங்கள் மார்பை நனைத்திடுமோ
என்று அஞ்சியிருந்தேன்

அதனால்
நானதை பார்க்கவில்லை...

சொல்லுங்கள்
நான் என்ன பேசியிருக்க முடியும்
என்னதான் பேசியிருக்க முடியும்

இந்த தூறல்
விழுந்ததிற்கே
தன்
பிரவாகம் ததும்பியதாக 
சொல்லுகிறாளே

நான்
என்னதான் செய்துவிடமுடியும்

அலையின் விளிம்பொன்று
என் விரல்களைமட்டும்
நனைத்துவிட்டுப் போனது...

( தொடரும் )...




3 comments:

  1. அலையின் விளிம்பொன்று
    என் விரல்களைமட்டும்
    நனைத்துவிட்டுப் போனது...

    அழகான கவிதை .பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி, அன்பு நன்றிகள் தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும்.

      Delete
  2. ஒரு பறவையின் இறகைவிட மென்மையை உணர்கிறேன் வரிகளில் !

    ReplyDelete